சென்னை: பூக்கடை பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவர் சென்னை பூக்கடை ஆண்டர்சன் சாலையில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் பல வருடங்களாக அரிசி குடோன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று(ஜன.7) காலை 10.30 மணியளவில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியது. அப்போது குடோனில் வேலைபார்த்து வந்த மூன்று பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, கீழே இறங்க வழியில்லாமல் மூன்றாவது மாடிக்கு ஓடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மூன்றாவது மாடியில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று நபர்களை ஏணி மூலமாக ஏறிச்சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பூக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இவ்விபத்தில் பல ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்புகள் எரிந்து நாசமாகின.
இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிய டியூசன் ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது