சென்னை: வேளச்சேரி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (26), கூடுவாஞ்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். நேற்று (நவம்பர் 19) காலை வழக்கம்போல் சந்தோஷ் வேலைக்குச் சென்ற பின்னர் அவரது தந்தை மனோகரன் (61), பாட்டி பேபியம்மாள் (75) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
மாலை சந்தோஷ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீடு வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. உடனே, சந்தோஷ் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மனோகரன் ஹாலில் இருந்த ஷோபாவில் மயங்கிய நிலையிலும், பக்கத்து அறையில் பாட்டி பேபியம்மாள் மயங்கிய நிலையிலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மற்றொரு அறையில் பீரோவில் இருந்த இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடுபோயிருந்தது. மேலும், வீட்டில் மூன்று காலி மதுபாட்டில்கள், சிகரெட் துண்டுகள் இருந்ததைக் கண்டார். உடனே, சந்தோஷ் தந்தை, பாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் சம்பவயிடத்திற்கு வந்து காவல் துறையினர், தடயவியல் வல்லுநர்கள் விசாரணை நடத்தினர். சம்பவயிடத்தில் இருந்த இரண்டு கைக்குட்டை, ஒரு இணை காலணி, மதுபாட்டில், சிகரெட் துண்டு ஆகியவற்றைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது 40 வயதுடைய பெண்மணி இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் காவல் துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் திருடியதாக ஒப்புகொண்டார். மேலும், பல லட்சம் ரூபாய் இருப்பதை அறிந்து திருட திட்டமிட்டதாகவும், வீட்டில் மூதாட்டி இருக்கும்போது பாலில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து மயக்கமடைய செய்து, பின்னர் பீரோவில் இருந்த பணத்தைத் திருடியதாகத் தெரிவித்துள்ளார்.
திருட்டுபோல் இருக்கக்கூடாதென மதுபாட்டில், சிகரெட்டை கீழே போட்டுச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை கைதுசெய்த காவல் துறையினர், வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவியிடம் பாலியல் சீண்டல் - அரசுக் கல்லூரி பேராசிரியர் கைது