சென்னை: அழிந்து வரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் பட்டியலில் செம்மரக் கட்டைகள் இடம்பெற்றுள்ள நிலையில், சமூக விரோத கும்பல் சிலரால் செம்மரக் கட்டைகள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது.
கடந்த வாரம், வெளிநாட்டு சரக்கு ஏற்றுமதி நிறுவனம் ஒன்று ஏற்றுமதி செய்த சரக்கில் சுமார் ரூ. 3.12 கோடி மதிப்பிலான 7.8 மெட்ரிக் டன் செம்மரக் கட்டைகள் இருப்பதை வருவாய் புலனாய்வு அலுவலர்கள் (DRI) கண்டுபிடித்தனர்.
வெளிநாடுகளுக்கு கடத்தல்
விசாரணையில் ஃபாப்ரிக் பசை (Fabric Glue) மற்றும் வேறு சில பொருள்களின் பெயரில் செம்மரக் கட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்த இருந்ததும், இந்த கடத்தலுக்குப் பின்னால் செம்மரக் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக செயல்பட்டு வரும் பாத்ஷா மஜித் மாலிக் இருப்பதும் தெரியவந்தது.
இதே பாணியில் ஏற்கனவே 48 கோடி ரூபாய் மதிப்புடைய 17 சரக்குகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டதும் விசாரணையில் அம்பலமானது.
சிக்கிய முக்கிய புள்ளி
இந்த வழக்கின் அடிப்படையில் ‘ஆவணங்களைக் கொண்டு கோடிக்கணக்கில் பண மோசடி நடந்திருப்பது உறுதியானதால், தனி வழக்கு ஒன்றை பதிவுசெய்து அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (டிசம்பர் 21) பாத்ஷா மஜித் மாலிக்-இன் வீடு உள்பட மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு தொடர்புடைய பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும், பாத்ஷா மஜித் மாலிக் என்ற கடத்தல் கூட்டத் தலைவனை பிடித்து அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாத்ஷா மஜித் மாலிக் அலுவலர்களின் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமலும், ஒத்துழைப்பு வழங்காமலும் இருந்தத்காக கூறப்படுகிறது.
24ஆம் தேதி வரை காவல்
இதனைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல் கூட்டத் தலைவன் பாத்ஷா மஜித் மாலிக்-ஐ நேற்று (டிசம்ப்ர 21) அமலாக்கத்துறை அலுவலர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியதன் அடிப்படையில் வரும் 24ஆம் தேதி வரை பாத்ஷா மஜித் மாலிக்-ஐ காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அலுவலர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்: 6 பேர் கைது