தூத்துக்குடி: இலங்கையில் டீ, காபி உள்ளிட்ட ஒரு சில பொருள்களைத் தவிர மற்ற அனைத்து உணவுப் பொருள்களும் பிற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனால் இலங்கைக்கு அருகே உள்ள தமிழ்நாட்டிலிருந்து விரளி மஞ்சள், சிகரெட், பீடி இலை, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பொருள்கள், போதைப் பொருள்கள் அடிக்கடி கடத்தப்படுகின்றன. இந்தப் பொருள்கள் தமிழ்நாட்டை விட இலங்கையில் 10 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதால், பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் இதில் ஈடுபட்டுவருகின்றனர்.
ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரிவு காவல் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, துணை ஆய்வாளர் ஜீவமணி, வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார், சில காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த படகிலிருந்த எட்டு பேர் கொண்ட கும்பலைச் சுற்றிவளைத்து காவல் துறையினர் சோதனை செய்ததில் அவர்களிடம் இரண்டு கிலோ வீதம் ஐந்து பாக்கெட்டுகளில் ’கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன்’ என்னும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இது பார்ப்பதற்கு ஐஸ் கட்டியைத் துருவி வைத்தாற்போல் உள்ளது. இதன் பன்னாட்டுச் சந்தை மதிப்பானது ரூ.30 கோடி வரையில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களைப் பிடித்த காவல் துறையினர் முதல்கட்ட விசாரணையில் சென்னையிலிருந்து இங்கு கொண்டுவந்து இங்கிருந்து படகு மூலமாக அதனை அவர்கள் இலங்கைக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.
8 பேர் கைது
இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பிரிட்டோ வாஸ் மகன் இருதய வாஸ் (43), அந்தோணி மகன் கிங் பேன் (25), பொம்மை மகன் சிலுவை (44), சிப்பிகுளம் ராஜ் மகன் அஸ்வின் (27), கீழகீழவைப்பார் ஆல்வின் மகன் வினிஸ்டன் (24), ஜெபமாலை மகன் சுபாஷ் (26), சிலுவை மகன் கபிலன் (21), சார்லி மகன் சைமோன் (எ) சுக்கு (30) ஆகிய எட்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்டது. இந்நிலையில் கியூ பிரிவு காவல் துறையினரின் விசாரணைக்குப் பின்னர், இவர்கள் அனைவரும் என்ஐபி (தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு) காவல் துறையினரின் வசம் ஒப்படைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கடல் சார்ந்த போக்குவரத்து சுலபமாகவும் இலங்கை இங்கிருந்து அருகில் இருப்பதாலும் கடல் வழி கடத்தல் அதிகரித்துவருகிறது. காவல் துறையினரும் பல்வேறு முயற்சிகளில் கடத்தலைத் தடுக்க தொடர் முயற்சி செய்துவருகின்றனர்.