தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் குமாரசாமிபேட்டை திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர், குயிலன். இவரது, மனைவி லதா. இவர் நேற்று (மார்ச் 10) மாலை 7 மணியளவில் குமாரசாமிபேட்டை தட்சிணாமூர்த்தி தெருவில் மடம் அருகே பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, லதாவின் எதிரே பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், லதா கழுத்தில் இருந்த செயினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதால் அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
இதனையடுத்து, பைக்கில் வந்த திருடா்கள் தப்பி ஓடினர். திருடா்கள் இழுத்ததில் லதா கீழே விழுந்ததை அடுத்து, தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக, அருகில் இருந்தவா்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின், லதா நகைத் திருட்டு முயற்சி குறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். நகர காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாயை அடித்துக்கொன்று நாடகம்: செல்லப்பிராணி பராமரிப்பு மைய ஊழியர்கள் கைது