கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லுாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, நவஇந்தியா அருகே தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் கேசவ் குமார் என்ற மாணவருடன் பேருந்தில் சென்று வரும்போது பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
பணமும் மிரட்டலும்
இச்சூழலில் தனக்கு பணம் வேண்டும் என கேசவ் குமார் கேட்க, அம்மாணவி தன் வீட்டிலிருந்து சிறிது சிறிதாக 35 ஆயிரம் ரூபாய், நகைகள் போன்றவற்றை கொடுத்து வந்துள்ளார். மீண்டும், மீண்டும் அவர் பணம் கேட்க ஒரு கட்டத்தில் மாணவி, பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கேசவ் குமார், அவரது நண்பர்கள் அந்த மாணவியிடம்,'நீ பணம் கொடுக்கவில்லை என்றால், எங்களிடம் இருக்கும் உன்னுடைய புகைப்படம், வீடியோக்களை ஆபாசமாக மாற்றி, சமூக வலைதளங்களில் பதிவேற்றோம் என மிரட்டியுள்ளனர்.
விஷம் குடித்து உயிரிழப்பு
மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் தினமும் பல்வேறு மொபைல் எண்களில் இருந்து அழைத்து ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மாணவி, நேற்று முன்தினம் (ஜுன் 21) விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்ட அவர் நேற்று (ஜுன் 22) உயிரிழந்தார்.
மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்
இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்தப் புகாரின் அடிப்படையில் கேசவ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரும் அவரது நண்பர்களும் கல்லூரி மாணவியரிடம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்பதும், இதற்கு முன்பே இவர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை- முக்கிய ஆதாரம் சிக்கியது!