கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தளவாய்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் அப்பகுதிகளை சேர்ந்த 200 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 17 பேருக்கு சட்டத்திற்கு புறம்பாக கடன் வழங்கப்பட்டதாக அந்த நேரத்திலேயே புகார் எழுந்தது. இந்த புகாரை கோவை கூட்டுறவு சங்கங்களின் உயர் அலுவலர்கள் விசாரணை செய்துள்ளனர்.
தற்போது தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், பொள்ளாச்சி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வராஜா(45), தளவாய்பாளையம் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் சிவாஜியிடம் அந்த குறிப்பிட்ட 17 விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது என்றும் அதில் பிரச்னை உள்ளது எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கினால் தள்ளுபடி செய்வது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிவாஜி, கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினரை அணுகியுள்ளார். அவர்கள் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலின் படியே சிவாஜியும் செயல்பட்டதால் செல்வராஜா, அவருக்கு உதவியாக செயல்பட்ட ஆனைமலை கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம் (36) ஆகியோர் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர். இருவரையும் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ!