சென்னை: வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(27). இவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணியாற்றி வந்தார். திருமணமாகாத கார்த்திக் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் சேர்ந்து ஓட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அனைவரும் தூங்கச் சென்ற நிலையில் நள்ளிரவு திடீரென கார்த்திக்கிற்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை பார்த்த உறவினர்கள் அவரை உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கார்த்திக்கு மேலும் உடல் நிலை மோசமடைந்தால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கார்த்திக் மரணத்திற்குத் தனியார் உணவக பரோட்டாவே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, தகவல் அறிந்து அங்குச் சென்ற எம்கேபி நகர் போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் "கார்த்திக்கின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என்ன என்பது தெரியவரும்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகியை திமுக எம்எல்ஏ அடித்ததாக புகார்!