சென்னை: மைலாப்பூர் துவாரகா மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த்(60), அனுராதா(55) தம்பதியினர். ஸ்ரீகாந்த் சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா அமெரிக்காவில் உள்ள அவர்களது மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றுவிட்டு நேற்று (மே7) காலை விமானம் மூலமாக சென்னை திரும்பியுள்ளனர்.
சென்னைக்கு திரும்பிய தம்பதியினரை அவர்களது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் காரில் ஏற்றிக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்த மகளுக்கு எழுந்த சந்தேகம்: வீட்டிற்கு திரும்பிய தம்பதியினரின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப்பில் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த மகள் சுனந்தா, தனது உறவினர் பெண்ணான அடையாறு இந்திரா நகரை சேர்ந்த திவ்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திவ்யா தனது கணவர் ரமேஷ் உடன் மைலாப்பூர் இல்லத்தில் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து திவ்யா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினர் இருவரும் அங்கு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த பொருள்கள் கலைக்கப்பட்டிருந்தன.
சிக்கிய நேபாள கார் ஓட்டுநர்: இதனால், அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்துள்ளனர். தொடர்ந்து, மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கார் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மயிலாப்பூர் போலீசார் தம்பதியரின் காரின் ஜி.பி.எஸ்-ஐ வைத்து கார் ஓட்டுநரான கிருஷ்ணாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து நேபாளம் தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்தபோது நேற்று (மே7) மாலை 6 மணியளவில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனைச் சாவடி பகுதியில் கார் ஓட்டுனர் கிருஷ்ணா வையும் அவரது நண்பரையும் காருடன் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பண்ணை வீட்டில் புதைப்பு: மேலும் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணாவின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் வசித்து பணி செய்து வருவதாகவும், நேற்று வீட்டில் வைத்து ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரையும் கொலை செய்து ஈசிஆர் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள அவர்களின் பண்ணை வீட்டில் புதைத்து விட்டு, பீரோவில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தையும், நகையையும் அவரது நண்பரின் உதவியுடன் கொள்ளை அடித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து காரில் தப்பி சென்றது தெரியவந்தது. மேலும், கொலை செய்த தம்பதியை புதைக்கும் போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, கொலை செய்து புதைக்கப்பட்ட வயதான தம்பதியர்களின் உடலை இன்று (மே 8) காவலர்கள் தோண்டி எடுத்து உடற்கூராய்வு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட வயதான தம்பதியரின் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரிடம் மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம்: துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை