சென்னை: ராமாபுரம் வள்ளுவர் சாலையில் ஒரு எஸ்பிஐ வங்கிக்கிளை உள்ளது. இதன் அருகே ஏடிஎம் மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் மேலாளர் முரளி பாபு நேற்று(ஜுன் 20) ஏடிஎம் மையத்திற்கு சென்று கணக்கை சரிப்பார்த்துள்ளார். அப்போது, அதிலிருந்து ரூ.1.50 லட்சம் பணம் மாயமாகி இருந்ததைக் கண்டு மேலாளரும், வங்கி அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமாபுரத்தில் ரூ.1.5 லட்சம்
பணம் எடுத்து சென்றதற்கான விபரங்கள் ஏதும் அதில் இல்லை. இதையடுத்து, ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் கடந்த ஜுன் 17ஆம் தேதி மாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த இரண்டு அடையாள தெரியாத நபர்கள் கார்டை பயன்படுத்தி ரூ.10ஆயிரம் வீதம் 15 முறை மொத்தம் ரூ.1லட்சத்து 50ஆயிரம் பணத்தை எடுத்து சென்றது பதிவாகி இருந்தது.
ஷட்டரை மூடாமல் திருட்டு
அதனை தொடர்ந்து ஆய்வு செய்ததில் நூதனமான முறையில் அந்த நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
அதன்படி, பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுக்கும் வசதி கொண்ட 'சிடிஎம்' இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது பணம் வெளியில் வந்தவுடன் அதன், பணம் வெளிவரும் "ஷட்டர்"-ஐ மூடாதபடி 20 நொடிகள் வரை கையில் பிடித்துக்கொண்டால் அந்த பணம் உள்ளே சென்றது போலவும், வாடிக்கையாளர் கணக்கிற்கே பணம் மீண்டும் திரும்பச் சென்றது போலவும் காட்டிவிடும்.
இந்த வித்தையை பயன்படுத்தியே பணத்தை நூதன முறையில் திருடி சென்றுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
முரட்டு வித்தையால் தொடர் திருட்டு
இதேபோல், விருகம்பாக்கம் சின்மையா நகரில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்திலும் அதே நபர்கள் கைவரிசை காட்டி ரூ.50ஆயிரத்தை எடுத்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு, அந்த அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதே போல் வேளச்சேரி விஜயநகர் ஏடிஎம்மில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரம், தரமணி ஏடிஎம்மில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாயையயும் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த நபர்கள் எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் வளாகத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்!