தஞ்சாவூர்: எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், வேல்பாண்டி ஆகியோர் நேற்று (செப்.15) காஞ்சிபுரத்தில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து சென்றனர். அப்போது காஞ்சிபுரம் புறவழிச்சாலையில் வெங்கடேசன், வேல்பாண்டி இருவரும் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி காரிலிருந்து தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றனர்.
இதையடுத்து ஓட்டுநர், காரின் உரிமையாளர் பிரகாஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலின்பேரில் பிரகாஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு முழுவதும் கடத்தப்பட்ட கார் குறித்த அனைத்து தகவல்களையும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பினார்.
இந்நிலையில் நேற்று மாலை பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமல கண்ணனுக்கும் இந்த தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமல கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு அவரது ஜீப் ஓட்டுநர் காவலர் பிரசாந்த் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றார். அப்போது கடத்தப்பட்ட கார் இருப்பதை பார்த்த ஜீப் ஓட்டுநர் பிரசாந்த் காரை துரத்தி சென்றார்.
இதனை அறிந்த குற்றவாளிகள் இருவரும் காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதைக்கண்ட அப்பகுதி போக்குவரத்து காவலர் தப்பி ஓடிய வேல்பாண்டியை மடக்கிப்பிடிக்க, வெங்கடேசன் தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் வேல்பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட காரில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: குடிபோதையில் மனைவியைக் கொன்ற கணவன்!