சென்னை: இந்திய கடல் எல்லையான அந்தமானை அடுத்த இந்திரா பாயிண்ட் என்ற இடத்தில் சிறிய ரக கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. கண்காணிப்பு பணியில் இருந்த இந்திய கடற்படையை சேர்ந்த கடலோர பாதுகாப்பு பிரிவு படையினர் அந்த சிறிய ரக கப்பலை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.
துறைமுகம் சுற்றிவளைப்பு: அப்போது அந்த சிறிய ரக கப்பலில் 11 ஈரானியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் பிடித்த கடலோர பாதுகாப்பு படையினர் அவர்கள் அனைவரையும் கப்பலுடன் இன்று (ஏப். 9) அதிகாலை சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
இதற்கிடையே கடலோர காவல்படையினரால் என்.ஐ.ஏ, ஐ.பி, ரா, மத்திய போதை பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு அலுவலர்கள், உள்ளூர் காவல் துறையினர் என அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கையில் துப்பாக்கியுடன் துறைமுகத்தை சுற்றி வளைத்தனர்.
கப்பலில் போதைப்பொருள்: அதனைத் தொடர்ந்து, கடலோர காவல்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலுடன் சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட 11 ஈரானியர்களும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள் வந்த சிறிய ரக கப்பலை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் குறிப்பிட்ட அளவிலான போதை பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பிடிப்பட்ட 11 ஈரானியர்களும் பிடிப்பட்ட போதை பொருளுடன் மத்திய போதை பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு காவல்படையினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு அலுவலகம் அமைந்துள்ள சென்னை அயப்பாக்கத்தில் 11 ஈரானியர்களும் கொண்டு செல்லப்பட்டு, அவர்களிடம் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எந்த ரகத்தை சேர்ந்தது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? யாருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது? எதற்கு பின்னால் உள்ள முக்கிய புள்ளிகள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு 11 ஈரானியர்களிடமும் தனித் தனியாக அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரான் கப்பல்?