சென்னை திருவல்லிக்கேணி முத்துருனிசா பேகம் 7வது தெருவை சேர்ந்தவர் பயாஸ் என்கிற பாக்கர்(23). இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றார். இவரது மெக்கானிக் கடை அருகே ரஹீம்(25) என்பவர் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் பயாஸ் தனது கடைக்கு பழுது பார்க்க வரும் இருசக்கர வாகனத்தை ரஹீம் வீட்டருகே நிறுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதே போல் பயாஸ் நேற்று இரவு இருசக்கர வாகனத்தை ரஹீம் வீட்டருகே நிறுத்தும் போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் பயாஸ் இரும்பு கம்பியுடன் சென்று ரஹீமிடம் தகாறில் ஈடுபட்டதுடன் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ரஹீம் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை பார்த்து வந்த நூர் என்பவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். தனது நண்பருடன் அங்கு சென்ற நூர் பயாஸிடம் என் நண்பனை மிரட்டுகின்றாயா என்று கேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார். பதிலுக்கு பயாஸ் இரும்பு கம்பியால் ரஹீமை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
உடனே தகவல் அறிந்து அங்கு வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் படுகாயமடைந்த பயாஸ், ரஹீம் இருவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பயாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஹீம், நூர் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நூரின் நண்பரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி ஜாக்கிரதை - சைபர் கிரைம் எச்சரிக்கை