சென்னை: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவல் குடியிருப்பில் வசித்துவரும் சாய்குமார் (50), தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மூன்றாம் அணியில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகின்றார்.
இவர் நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபடுவாராம். நேற்று முன்தினம் இரவு அதிகமான குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதேபோல குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.
அதற்கு அவரது மகள் சாய்குமாரைக் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த சாய்குமார், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆபத்தான கட்டத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளருக்கு மருத்துவர்கள் தீவிர மருத்துவம் அளித்துவருகின்றனர். இது குறித்து திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஜவுளிக் கடைக்குள் கடை ஊழியரைத் தாக்கிய பெண் - போலீஸ் விசாரணை