திருப்பத்தூர்:வாணியம்பாடி பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யம் நடத்தி வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வாணியம்பாடி நேதாஜி நகர், காமராஜ் நகர், லாலா ஏரி உள்ளிட்டப் பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சாராயத்தை பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன், அவர்களது வளர்ப்பு மகள் உஷா, மகன்கள் தேவேந்திரன், சின்னராஜ் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த நளினி உட்பட 7 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சமீபத்தில் செய்யாறு பகுதியில் உள்ள விஜி என்பவரிடமிருந்து, எரிசாராய கேன்களை வாங்கி விற்பனை செய்ததுபோக, மீதமுள்ள எரிசாராய கேன்களை தனது நேதாஜி நகர்ப்பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தொட்டியில் வைத்து, பதுக்கி வைத்திருப்பதாக மகேஸ்வரி மூலம் தகவல் கிடைத்தது.
மேற்படி சாராயக் கேன்களை கைப்பற்ற காவல்துறையினர், மகேஸ்வரியின் மகனான சின்னராஜ், மற்றும் அவனது கூட்டாளி கல்லப்பாடி மோகன் உள்ளிட்டோரை அழைத்துச்சென்று சாராயக் கேன்கள் பதுக்கி வைத்து இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டுக்கொண்டு இருக்கும் தருணத்தில், காவல் துறையினருக்கு போக்குக்காட்டி இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர்.
அப்போது காவல் துறையினர் இருவரையும் விரட்டிப்பிடிக்க முயன்றபொழுது, அங்கிருந்து தப்பி ஓடியவர்கள் இருவரும் பாறைகளின் நடுவே வழுக்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்களைப் பிடித்த காவல் துறையினர் சின்னராஜ் என்னும் நபருக்கு கையில் முறிவும், அதேபோல கல்லப்பாடி மோகனுக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளனர்.
பின்பு இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் மாவுக்கட்டு போடப்பட்டதாகவும், பின், இருவரையும் அழைத்து வந்து வாணியம்பாடி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அத்துமீறி நுழைந்த படகில் போதைப் பொருள்; ஈரானியர்கள் 11 பேரிடம் விசாரணை!