சென்னை: அய்யப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் அக்ஷய். இவர் அய்யப்பாக்கம் - அம்பத்தூர் செல்லும் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
லாக்டவுனில் லாக் உடைப்பு
கடந்த மே 31ஆம் தேதி இரவு 10 மணியளவில் அக்ஷய் கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இதன்பின், நேற்று (ஜூன் 1) காலை பராமரிப்பு பணிக்காக அங்கு வேலை செய்து வரும் ஜஹாங்கீர் என்பவர் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது கடையின் பின்புறம் உள்ள குடோனின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு விரைந்து வந்த கடை உரிமையாளர் குடோனில் சென்று பார்த்தபோது, சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான துணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் அக்ஷய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஓட்டம் எடுத்த நபர்
இந்நிலையில், இன்று (ஜுன் 2) அதிகாலையில் அய்யப்பாக்கம் ரோட்டில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேரை விசாரிப்பதற்காக நிறுதியுள்ளனர். காவலர்களை பார்த்ததும் அதில் ஒரு நபர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மற்றொரு நபரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின்போது துணிக்கடையில் திருடியது இருசக்கர வாகனத்தில் வந்த சதீஸ் (20), தப்பி ஓடிய நபர் முகேஷ்(24) ஆகியோர்தான் என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவலர்கள், திருட்டில் ஈடுபட்ட இரணியன் (24) என்ற நபரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த துணிகளையும் பறிமுதல் செய்தனர்.
சிசிடிவியில் உறுதி
பின்னர் காவல்துறையினர் கடை உரிமையாளரின் புகார் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் உதவியோடு வழக்குப்பதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறி இறைச்சிக் கடை திறப்பு: 100 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்