சென்னையில் கூலி வேலை செய்து வருபவரின் மகளை, அவரது அண்ணனின் பராமரிப்பில் கடலூரில் விட்டுச் சென்றுள்ளார். 15 வயதான அந்தச் சிறுமி மனவளர்ச்சி குன்றியவராவார். இச்சூழலில் கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்லாத அச்சிறுமியிடம் ஆறு மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அடிக்கடி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தச் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து சிறுமியிடம் அவரின் பெரியப்பா விசாரித்ததில் தீனா, விக்னேஷ், ஆனஸ்ட்ராஜ் உள்பட ஐந்து இளைஞர்கள் கடந்த ஆறு மாதமாக தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியப்பா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு பேரை தேடிவருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடலூரில் உள்ள பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.