தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று (ஜூலை 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,"தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் பால கார்த்திக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சுரேஷ் என்பவருடன் இணைந்து 'பாரத மக்கள் மருந்தகம்' கடையை நடத்தி வருகிறார்.
சுரேஷூக்கும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவருக்கும் இடையே வியாபார ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
போலி சிறப்பு பிரிவு காவலர்கள்
இதன் காரணமாக, ஜூலை 1ஆம் தேதி பணம் பறிக்கும் நோக்கில் சுரேஷ்பாபு தன் கூட்டாளிகள் ஐந்து பேருடன் சேர்ந்து தூத்துக்குடியில் பால கார்த்திக் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, சுரேஷ்பாபுடன் வந்தவர்கள் மதுரை சிறப்பு பிரிவு காவலர்கள் எனக்கூறி பால கார்த்திக் மனைவி சித்ரகலா கழுத்தில் கிடந்த 5.50 பவுன் நகையையும், செல்போனையும் பறித்ததுடன் சுரேஷை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
சிசிடிவியில் சிக்கினர்
இந்த சம்பவம் தொடர்பாக சித்ரகலா மத்திய பாகம் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், சித்ரகலாவிடம் நகையை பறித்து சென்றது சுரேஷ்பாபு(30) , திருநெல்வேலியை சேர்ந்த சரவணன்(39), சதாம் உசேன்(29), சென்னை தண்டலத்தை சேர்ந்த வீரமணிகண்டன்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், கொள்ளைக்கு பயன்படுத்திய கார், நகை, செல்போனை பறிமுதல் செய்தனர்" என்றார். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சித்ரகலாவிடம் நேற்று (ஜூலை 6) நேரில் வழங்கினார்.
இதையும் படிங்க: தொழில் அமைத்து தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்