வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அடுத்த புதுவசூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ஏழுமலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது திமுகவில் உள்ளார். இன்று இவர் வீட்டில் வருமானவரித் துறை அலுவலர்கள் பத்து பேரும், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்களும் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
வருமானவரித் துறை அலுவலர்கள் ஏழுமலை வீட்டிற்குள் நுழையும்போது, அங்கிருந்த ஒரு நபர் சந்தேகப்படும் வகையில் கட்டை பை ஒன்றை காம்பௌண்டுக்கு அடுத்தப் பக்கத்திற்கு தூக்கி வெளியே வீசியுள்ளார். அதை கண்ட வருமானவரித் துறையினர், அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தததில், 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஏழுமலை தந்த விளக்கத்தில், "இந்த பணம் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் வந்தது. இதனை வீட்டில் வைக்ககோரி எங்களது வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்து வைத்திருந்தேன். திடீரென்று பத்து நபர்கள் வருவதை பார்த்த அவர்கள் பயந்து போய் பணப்பையை தூக்கி வீசியுள்ளனர்" என வாக்குமூலம் அளித்தார். இதனை ஏற்க மறுத்து, அந்த பணத்தின் உரிய ஆவணங்கள், அவரின் வங்கி கணக்குகள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை செய்தனர்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு, கல்லூரிகளில் நடந்த ஐடி சோதனையில் 11 கோடி பணம் கைப்பறப்பற்றப்பட்டதால் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வேலூரில் ஐடி ரெய்டு நடைபெற்ற சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.