வேலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் இது குறித்து தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. வேலூரில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அரசு அணை கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினால் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு எதிர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.