பள்ளிக்கல்வித்துறை அறிவித்த பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்ற செய்தியைக் கேட்டு பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளியிலுள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன்(54). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி செய்தித்தாளில், அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதாகச் செய்தி வந்தது. அதைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தார் கார்த்திகேயன்.
இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் கார்த்திகேயனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.