வேலூர் மாவட்டம் இடையஞ்சாத்து கணேச்சாரி நகரை சேர்ந்த சொக்கலிங்கம்(83) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகள்களும் தியாகராஜன்(57) என்ற மகனும் உள்ளனர். தியாகராஜனும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் தன் தந்தையை கடைசி வரை பராமரித்துக் கொள்வதாகக் கூறி அவரது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது ஆனால் சொத்தை எழுதி வாங்கிய பின்பு அவருடைய தந்தையை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இந்நிலையில் சொக்கலிங்கம் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பல முறை கூறி முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சொக்கலிங்கம் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்தார். ஆஸ்துமா நோயாளியான அவர் வரும்போது ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகளுடன் வந்திருந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மூச்சு விடக் கூட சிரமப்படும் சொக்கலிங்கம், என் ஒரே மகனை நம்பி ஏமாந்து விட்டேன் எனது சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு என்னைத் தெருவில் தள்ளி விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் மனு அளித்தார். இச்சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் இதேபோல் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டுப் பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்திய சம்பவத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பெற்றோரின் சொத்தை மகனிடம் இருந்து மீட்டுக் கொடுத்தார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.