வேலூர்: ஆந்திராவிலிருந்து காட்பாடி வழியாக தமிழ்நாட்டிற்கு கஞ்சா, ரேஷன் அரிசி உள்ளிட்டவை ரயில் மூலம் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுப்பதற்காக அவ்வப்போது காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மதுசூதனன், துணை ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படையினர் இன்று (ஜூலை 9) அதிகாலை ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்குச் சென்றனர். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கேரளா கொல்லம் செல்லும் விரைவு ரயில் வந்தது. அதில் ஏறிய தனிப்படையினர் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
தனிப்படையினர் விசாரணை
அப்போது சேலத்தை சேர்ந்த சதீஷ், பிரகாஷ், சுரேஷ், நித்தியானந்தம் ஆகியோரின் பைகளை காவல் துறையினர் சோதனை செய்தபோது, அதில் 144 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 32 லட்சம் பணம் இருந்ததும், அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வெள்ளி, பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து, அதனை எடுத்துக்கொண்டு தனிப்படையினர் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு வந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 144 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 32 லட்சம் பணம் ஆகியவை வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து வெள்ளி, பணம் கொண்டுவந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யாருக்காக இவற்றை கடத்திச் சென்றார்கள் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: '100 நாள் வேலை திட்டத்தில் குளறுபடி - ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்'