உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்ஜய் குப்தா. இவரது மகன் ஹரிஸ் குப்தா (21). ஹரிஸ் குப்தாவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வி.ஐ.டி.யில் இளங்கலை கணினி அறிவியல் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது.
இருப்பினும், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் படிக்க இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய சஞ்ஜய் குப்தா, வேலூரில் தனக்கு தெரிந்த ரமேஷ் என்பவரை அணுகியுள்ளார். அவர் தன்னுடன் பணியாற்றும் சதீஷ்குமார் என்பவரின் மூலம் தனக்கு அறிமுகமான வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த பாமக நிர்வாகி வெங்கடேஷ் என்பவரை சஞ்ஜய் குப்தாவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் அலுவலர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும், தான் நினைத்தால் அங்கு எளிதாக சீட் வாங்கித்தர முடியுமென வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ரூ. 5 லட்சத்தை லஞ்சமாக வழங்கினால் சீட் வாங்கி தருவதாக ஆசைவார்த்ததைக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சஞ்ஜய் குப்தா மகனின் சீட்டுகாக, இரண்டு தவணைகளில் ரூ. 5 லட்சத்தை ரொக்கமாக பாமக நிர்வாகி வெங்கடேஷிடம் கொடுத்துள்ளார்.
இதனிடையே, பணத்தை கொடுத்த நீண்ட நாள்களாகியும் வெங்கடேஷ் சீட்டை வாங்கி கொடுக்கவில்லை. அத்துடன், சஞ்ஜய் குப்தாவின் அழைப்பை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். வெங்கடேஷின் இந்த செயல் அவர் மீது சந்தேகத்தை வரவழைத்துள்ளது.
அது குறித்து விசாரித்தபோது, வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தனக்கு செல்வாக்கு உண்டு என அவர் கூறியது பொய் என தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த சஞ்ஜய் குப்தா, தான் வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டதற்கு, வெங்கடேஷ் கொடுக்க மறுத்துள்ளார்.
![வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-03a-pmk-member-arrested-for-cheating-image-7209364_18122020195234_1812f_1608301354_481.jpg)
இதனையடுத்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் சஞ்ஜய் குப்தா, அவரது நண்பர் ரமேஷ் ஆகிய இருவரும் பாமக நிர்வாகி வெங்கடேஷ் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இதனடிப்படையில், வழக்கு பதிந்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர்கள் இலக்குவன் மற்றும் கவிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் வெங்கடேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் பணமோசடி நடைபெற்றதற்கான முகாந்திரம் உறுதி செய்யப்பட்டது. அத்துடன், இதே போன்று பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கி கொடுப்பதாகக் கூறி பலரை ஏமாற்றியது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், அவரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் கோடிக் கணக்கில் மோசடி செய்த தம்பதி!