முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய பெண்கள் தனிச் சிறையில் நளினி தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய கோரியும் தனது கணவர் முருகனின் தந்தை உடல் நலம் சரியில்லாததால், கணவருக்குபரோல் வழங்கக்கோரி சிறையில் மூன்றாவது நாளாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் தன்னையும் தனது கணவர் முருகனையும் கருணை கொலை செய்யும்படி நளினி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில் வழக்கறிஞர் புகழேந்தி இன்று வேலூர் பெண்கள் சிறைக்கு சென்று நளினியை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் நளினியின் கணவர் முருகனையும் வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “நளினி கடந்த 27ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தன்னையும் தனது கணவரையும் கருணை கொலை செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். 29 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். இதற்கு முன்பு எங்களுக்கு முன் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் தற்போது அந்த நம்பிக்கை இல்லை. சிறை அதிகாரிகள் எனது கணவரை துன்புறுத்துகிறார்கள். இதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே என்னையும் எனது கணவரையும் கருணை கொலை செய்ய வேண்டும்.
மேலும் இதுதொடர்பாக இன்று 2 மனுக்களை நளினி அனுப்பியுள்ளார். அதில் ஒன்று உச்சநீதிமன்றத்தில் தனது கருணைக்கொலையை ஆதரித்தும் வலியுறுத்தியும் அனுப்பியுள்ளார், மற்றொரு மனு தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்பினார் .
அதில் தனது கணவரையும் தன்னையும் புழல் சிறைக்கு மாற்றும்படி சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சிறையில் தொடர்ந்து எனது கணவரை துன்புறுத்துகிறார்கள். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை சிறை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை.
எனவே வேறு சிறைக்கு மாற்ற அனுமதி கூறியிருந்தோம். எங்களை கர்நாடகா சிறைக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் நளினி கேட்டுள்ளார். முருகனும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு எந்த ஒரு பொருளையும் சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்கவில்லை.
அவர் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நலிவுற்று காணப்படுகிறார். முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்ததாக சிறை அதிகாரிகள் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது.
இந்த வழக்கில் சிறையில் உள்ள பிற கைதிகளுக்கு இதுபோன்று எந்தவொரு புகாரும் இல்லாத நிலையில் குறிப்பிட்டு நளினி, முருகனை மட்டும் சிறை அதிகாரிகள் துன்புறுத்த காரணம் என்ன? சிறையில் நளினி முருகன் துன்புறுத்தப்பட முழுக்க, முழுக்க சிறிய டிஐஜி ஜெயபாரதி தான் காரணம். முருகன் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரிப்பதற்காக அவர்மீது செல்போன் பறிமுதல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதேபோல் சிறையில் பல்வேறு வகையில் ஊழல் நடந்துகொள்வதை முருகன் குற்றச்சாட்டாக அரசுக்கு மனு அளித்தார். குறிப்பாக நாள்தோறும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவில் 30,000 ஊழல் நடப்பதாக முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைக்கும் முதலமைச்சருக்கும் முருகன் மனு அளித்தார். இதுவும் முருகன் துன்புறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாகும். டிஐஜி ஜெயபாரதி இதுபோன்று சிறைக் கைதிகளை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்.
திருச்சி சிறையில் இருந்தபோது இவர் துன்புறுத்தல் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் ஆண்கள் சிறையில் மிளகாய் பொடியை கரைத்து கைதிகள் மீது ஊற்றியதாக இதே டிஐஜி ஜெயபாரதி மீது திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே டிஐஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.
இதையும் படிங்க: முருகன் நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை வரும் டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு