திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஃபாத்திமா என்பவருடைய மகன் அல்தாப்-க்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. திருமண ஏற்பாடுகளுக்காக ஃபாத்திமா வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகேயுள்ள கனரா வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றுள்ளார்.
அப்போது வங்கியிலிருந்தே பின்தொடர்ந்து சென்ற இரண்டு சிறுவர்கள், அந்த பெண்ணின் உடையில் அழுக்குப் படிந்துள்ளாதாகக் கூறி உள்ளனர். இவ்வேளையில் திரும்பி பார்த்த ஃபாத்திமாவிடம் இருந்து, பணம் இருந்த கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். இதையறிந்து அலறிய பெண்ணின் சத்தம் கேட்டு, அங்குள்ளவர்கள் உடனே வந்து என்ன என்று விசாரித்துள்ளனர்.
வழிப்பறி கொள்ளையரை துரத்திச் சென்று கைது செய்த போலீஸ்!
உடனடியாக இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். தொடர்ந்து அங்குள்ள கடைகளில் பதிவாகியுள்ள கண்காணிப்புப் படக்கருவிகளின் பதிவுகளை வைத்து இரண்டு சிறுவர்களை தேடி வருகின்றனர்.