அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் திமுக தேர்தல் பரப்புரையை கடந்த 20ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இன்று (டிச.23) தொடங்கிய இந்த பரப்புரையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 16 ஆயிரத்து 500 கிராம சபைகள் - வார்டுகளில் திமுக மாவட்ட, மாநகரச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் என 1704 திமுக நிர்வாகிகள் இணைந்துள்ளனர். அந்த கூட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் உள்ள மேல்பட்டி ஊராட்சியில் இன்று (டிச. 23) கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். பின்னர், கிராமசபைக் கூட்டத்தில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், 'அதிமுக பொங்கல் பரிசை அறிவிப்பதற்கு முன்பாகவே நாங்கள் அவர்கள் செய்த ஊழல் முறைகேடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுவிட்டோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையினருக்குப் புகார் அளித்துள்ளோம். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம்.
அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதற்குப் பின்னர் தான் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஊழல் புகார் அளித்தோம். தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவித்ததால் தான் நாங்கள் புகார் கூறுகிறோம் எனக் கூறப்படுவது உண்மையல்ல.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாடு தழுவிய பெரிய பிரச்னையாகும். பல மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் அது குறித்து பேச வேண்டும். அது தொடர்பாக தற்போது உடனே பதிலளிக்க முடியாது. அங்கெல்லாம் இந்த பிரச்னை போய் வரட்டும். பிறகு பார்க்கலாம்.
80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்ற அறிவிப்பை திமுக கடுமையாக எதிர்க்கிறது.
முதியோர்களுக்கு தபாலில் வாக்களிக்க வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்ற புதிய அறிவிப்பே மிகப்பெரிய பிராடுத்தனமானது. தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடக்க நிறைய வழிகள் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க : பச்சையப்பன் அறக்கட்டளை வழக்கு! - தலைமை நீதிபதி அமர்வு அதிரடி!