வேலூர்: மாவட்டத்தின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் அமைந்துள்ளது பிரபல நகைக் கடை ஜோஸ்-ஆலுக்காஸ், 5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் நேற்று முன்தினம்(டிச .14) சுமார் 15 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை(டிச.15) வடக்கு மண்டல காவல் துறை தலைவர் சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
சிசிடிவியில் சிக்கிய மாஸ்க் உருவம்
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ் குமார் கூறுகையில், ”இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி கேமிராவில் மாஸ்க் அணிந்த ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை மூலம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
மேலும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முப்படைத் தளபதிகள் குழுத் தலைவரானார் நரவணே