வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் நிலத்தை அளந்து பட்டா மாற்றம் செய்வதற்காக ரூ. 8,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் நேற்று (ஜன.29) கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வேலூர் சேண்பாக்கம் கழனிகாட்டுத் தெருவில் உள்ள பாலாஜியின் வீட்டில் நேற்று (சனிக்கிழமை) மாலை நான்கு மணியளவில், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனை நள்ளிரவை கடந்துவரை நடைபெற்றது. இந்தச் சோதனையில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உரிய ஆவணங்கள் இல்லாத 22 லட்சத்து 84 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கம், வங்கி, சொத்து, நிலம் தொடர்பான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இது தொடர்பான தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 2,34,281 பேருக்கு கரோனா