தமிழ்நாடு அரசு குடிமராமத்தது திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி பொதுப்பணித்துறையின் கீழ் வராத ஏரிகுளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன வேப்பம்பட்டு என்ற பகுதியில் உள்ள ஏரியை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமரத்து பணியை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகசுந்தரம், "வேலூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக 15.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மன்னராட்சி காலத்தில் விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்காக ஏரி, குளங்களை வெட்டி மழை காலத்தில் மழை நீரை சேகரித்து விவசாயம், குடிநீர் மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் இதனை அரசு கவனிக்காமல் விட்டதால் ஏரிகள் வண்டல் மண் நிறைந்து ஏரியில் நீரின் கொள்ளளவு குறைந்த காரணத்தினாலும், பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசு மழைநீரைச் சேகரிக்க மீண்டும் ஏரி குளங்களை தூர்வார நிதி ஒதுக்கி குடிமராமத்து பணிகளை தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.