திருப்பத்தூர்: பஜார் தெருவில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு கோபுரத்தின் மேலே உள்ள மணிக்கூண்டு மேல் பகுதியை, கத்தரிக்கோல் பயன்படுத்தி துண்டித்து அதன் வழியாக உள்ளே இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள்; இரண்டு உண்டியல்களை உடைத்து ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அலாரம் வயரைத் துண்டித்து திருட்டு
அதேபோல், முருகன் சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் பூஜை உபகரணங்கள், சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அது மட்டுமன்றி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த அலாரம் வயரை வெட்டி அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கோயில் நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
காவல் துறை விசாரணை
இச்சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறை கைரேகை வல்லுநர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
மாவட்டத்தில் இந்து அறநிலை கட்டுப்பாட்டில் இருக்கும் மாடப்பள்ளி, ஜலகாம்பாறை, உள்ளிட்ட கோயில்களில் அடிக்கடி திருட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்