திமுகவின் தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக ’அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற பெயரில் கிராம சபைக் கூட்டம், குடியாத்தம் தொகுதி மேல்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய துரைமுருகன், " விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை கொண்டு வந்தது திமுக. இப்படிப்பட்ட இலவச மின்சார திட்டத்தையே ரத்து செய்ய இந்த அதிமுக அரசு முயற்சிக்கிறது. நிச்சயம் 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தடையின்றி தொடரும். மேலும், சென்னை வெள்ளத்தின்போது, நிவாரணமாக தமிழக அரசு கொடுக்கும் அரிசியோடு சேர்த்து கூடுதலாக மத்திய அரசு கொடுக்க சொல்லி வழங்கிய அரிசியை அதிமுக அரசு கள்ளத்தனமாக விற்றுள்ளது. நேற்று ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலில் இதுவும் ஒன்று.
திமுக ஆட்சியில் மின்சாரம் இல்லை என குற்றஞ்சாட்டிவிட்டு, தற்போது வெளிமாநிலத்தில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி வினியோகிக்கிறார்கள். இதனாலேயே மின் கட்டணம் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடியாக இருந்த கடன், இன்று 6 லட்சம் கோடியாக இருக்கிறது. தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. நாம் கொண்டு வந்த தொழிற்சாலைகள் எல்லாம் ஆந்திராவிற்கு போய்விட்டன " என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவாக அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற கையெழுத்து பரப்புரையை துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: உதயநிதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்