இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்வதோடு போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று (பிப். 22) மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்!
விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூரில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்ட திமுக சார்பில் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுகவின் மாவட்ட செயலாளருமான ஏபி நந்தகுமார் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர் என்று விலைவாசி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மகளிர் அணியினர் சமையல் கியாஸ் சிலிண்டரை செருப்பால் அடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் எவ வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை திமுக சார்பில் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, அண்ணாசிலை அருகே முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான எவ வேலு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் மாடுபூட்டி ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தொண்டர்கள், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாட்டு வண்டியில் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, திருவள்ளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வீஜி ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க...‘3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்’ - ஸ்டாலின்