தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்துள்ள பிகில், நடிகர் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி ரசிகர்கள் உற்சாகமுடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கண்ட திரைப்படங்களுக்கு தீபாவளி பண்டிகை நெருக்கடியைக் காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிகில், கைதி ஆகிய திரைப்படங்களுக்கு திரையரங்க நுழைவு கட்டணம் ரூ 500 முதல் 1000 வரை விற்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்க நுழைவு கட்டணம் அரசாணை 762ன்படி மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும், வாகனம் நிறுத்தக் கட்டணம் அரசாணை என் 891ன்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படவேண்டும்.
எனவே வேலூர் மாவட்டத்தில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும் முறைகேடுகள் நடைபெறாத வகையிலும் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழு முறையாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.