தமிழ்நாடு முழுவதிலும் மாவட்ட வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வாரியாக நடைபெற்ற கூட்டங்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆர்.கே. பேட்டையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் பங்கேற்று, தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்தும், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ள செயல்பாடுகள் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கவேலு, கலைச்செல்வி, மோகனரங்கம், செல்வம், அகஸ்தியன் ராஜ், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்கள், உதவி பணியாளர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபாகர் கலந்து கொண்டு பயிற்சியினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான ஆறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 47 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 22 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 92 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டம்
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்
காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
‘அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பலியாகியுள்ளன’ - சீமான்