தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வந்தநிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 9ஆம் தேதி முதல் அனைத்துக் குடும்பங்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளி மதுரை நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக மலைகிராம மக்கள் நேற்று அதிகாலை முதலே காத்திருந்தனர்.
நேற்று ஒரு நாள் மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்றும் காலதாமதம் ஏற்பட்டால் பொங்கல் பரிசுக் கிடைக்காது என்றும் கிராம மக்களிடம் வதந்தி பரவியுள்ளது. இதனால், கிராம மக்கள் அதிகாலை முதலே நியாயவிலைக்கடையின் முன்பு காத்திருந்தனர். காலை 10.30 மணி வரையிலும் காத்திருந்து பின்னர் பொங்கல் பரிசை வாங்கிச் சென்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்னேரி தாமலேரிமுத்தூர், புதுப்பேட்டை, ஜெயபுரம் நாட்றம்பள்ளி மற்றும் பச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு நேற்று முதல் பொங்கல் பரிசை அமைச்சர் வழங்கி வருகிறார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசினைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையையொட்டி 5 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனை