வேலூர்: அணைக்கட்டு அருகே ஜமால்புரம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொகுப்பு பால் குளிரூட்டும் மையம் திறப்பு விழா நேற்று (மே. 25) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு பால் குளிரூட்டும் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் நாசர், "பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 85 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 276 கோடி ரூபாய் பால்வளத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பால் கொள்முதல் 34 லட்சம் லிட்டராக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது உற்பத்தி திறனை அதிகரித்து, நேற்று மட்டும் நாற்பத்தி மூன்று லட்சத்து 14 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தற்போது வெண்மைப் புரட்சி ஏற்பட்டுள்ளது.
பால் உற்பத்திக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 156 பால் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மகளிர் குழுவினர் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், "பால் கொள்முதல் விலையை அதிகரிக்க முதலமைச்சரிடம் அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பால் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால் வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிசி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பாடலில் இடம்பெற்று சர்ச்சையான ’ஒன்றியம்’ வார்த்தை குறித்து விளக்கமளித்த கமல்!