சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது அளப்பரிய ஆர்வம்கொண்டவர் இமயவரம்பன். வேலூர் மாவட்டம் ஓல்டு டவுனைச் சேர்ந்த இவர் தனது ஓவிய ஆசிரியர் ஜான் பாபுவிடம் ஓவியத்தைக் கற்றுத் தேர்ந்தார்.
படிப்பை முடித்தபின் முழுநேர ஓவியராக மாறிய இமயவரம்பன், வித்தியாசமான சிந்தனையுடன் ஓவியங்களை வரையக்கூடியவர். அரிசியில், கோழி முட்டையில், பறவை இறகுகளில் உருவங்களை வரைந்து ஓவியத்தில் புதுமை படைத்துவருகிறார்.
தன்னுடைய ஓவியத் திறனை அனைத்து மக்களிடமும் கொண்டுசேர்க்க எண்ணிய இமயவரம்பன், தான் பார்த்த ஓவிய ஆசிரியர் பணியை இதற்காகவே துறந்துள்ளார். பின்னர் தான் எண்ணியவாறு ஓவியத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், சாலையோரத்தில், ஒரே ஒரு குடையோடு கடை விரித்துள்ளார் இந்த வித்தியாச ஓவியர்.
கீ செயினில் முகம் வரைவது, அரச இலைகளில் உலக அதிசயங்களை வரைவது என வேலூர் மக்களை அசத்திவரும் இமயவரம்பனிடம், ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து ஓவியம் வரைந்தெடுத்துச் செல்கின்றனர்.
கலைஞர்களுக்கே உரிய பண்புகளுடன் இருக்கும் இமயவரம்பன் ஆடம்பரத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ எதிர்பார்க்காமல் மிக எளிமையாக இருக்கிறார். வாழ்வதற்கே தகுதியற்ற ஒரு பாழடைந்த வீட்டில் வசித்துவரும் இவர், பாதி சேதமடைந்த கட்டிலுடன் தனது ஓவியங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்துவருகிறார்.
இவரது ஓவியத்திறனை கேள்விப்பட்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், இமயவரம்பனை நேரில் அழைத்துப் பாராட்டியதோடு, வீடு அல்லது பணம் தந்து உதவலாமா என்று கேட்டுள்ளார். ஆனால், அதனை மறுத்த இமயவரம்பன், ஒரேயொரு கோரிக்கையை மட்டும் முன்வைத்தார்.
இவரின் கலை உணர்வை வியந்த மாவட்ட ஆட்சியரும் அவ்வாறே அதனை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். இக்கலையை வளர்க்க அரசு பொருள்காட்சியில் ஒரு கடை வைத்துத் தர வேண்டுமென்பதே அக்கோரிக்கை. கலையை இமயவரம்பன் வளர்ப்பார்... இச்சமூகம் அவர் போன்றோரை வளர்க்கட்டும்...
இதையும் படிங்க: கான்கிரீட் படகுப்போட்டி: பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு