வேலூர்: அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்கு ஆண்டுகள் எம்பிபிஎஸ் படிப்பு முடித்து பயிற்சி மருத்துவர்களாக சுமார் 104 பேர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் கரோனா வார்டு உள்பட பல பிரிவுகளில் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 25 ஆயிரம் உதவி ஊதியம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை என்றும், கரோனா ஊக்கத் தொகையும் 50 விழுக்காடு வழங்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக பல முறை நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பயிற்சி மருத்துவர்கள் குமுறுகின்றனர்.
இதனிடையே நேற்று (ஜனவரி 10) மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் எதிரில் 104 பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாதம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும், மூன்று மாத ஊதியம் வழங்கினால் மட்டுமே பணிக்குத் திரும்புவதாகக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் போராட்ட இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்பு மூன்று மாத ஊதியம் நாளை வழங்கப்படும் என்று உறுதி அளித்து அவர் கைப்பட எழுதிக் கொடுத்தார். அதனடிப்படையில் ஆட்சியரின் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்பட்டு போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டு கலைந்துசென்றனர்.
ஊதியம் நாளைக்குள் வழங்கப்படவில்லை எனில் போராட்டம் தொடரும் என்று பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அடுத்தவர் குழந்தையும் தங்களது என ஸ்டிக்கர் ஒட்டாதே விடியா அரசே! - இபிஎஸ்