வேலூர் மாவட்டம், அரக்கோணம் எஸ்.ஆர் கேட் பகுதியில் அரக்கோணம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி, அதனுள்ளே காவல்துறையினர் சோதனை செய்தபோது, பெட்டிகளிலும், பைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைதொடர்ந்து 45 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா, 36 பைகளில் வைக்கப்பட்டிருந்த பான்மசாலா என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான, இரண்டு டன் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களையும், டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், வாகன ஓட்டுநரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜுவ் ராமையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கடத்தி வருபவர்கள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரக்கோணம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மனோகரன் எச்சரித்துள்ளார்.