திருச்சி: மணப்பாறை அடுத்த அழககவுண்டம்பட்டி, மானாங்குன்றம், வில்லுகாரன்பட்டி, முத்தழகம்பட்டி, சிலம்பம்பட்டி, கோசிப்பட்டி, எண்டபுளி, மாங்கனாப்பட்டி, களத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்மங்கி, செண்டுமல்லி, கேந்தி உள்ளிட்ட பூக்கள் விவசாயமும், நெல்,சோளம்,கடலை, மிளகாய் போன்ற உணவு தானிய விவசாயங்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று(ஜன.29) தண்ணீருக்காக குமரிகட்டி, கருப்புரெட்டிபட்டி வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நிலப்பகுதியை நாசமாக்கியுள்ளன.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “காட்டெருமைகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. கடந்த மாதம் பெய்த மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இந்த சந்தோசத்தில் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் அதிக பரப்பளவில் சாகுபடி செய்துள்ளோம்.
ஆனால் காட்டெருமை கூட்டங்களால் இரவு, பகல் தூக்கமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளோம். இதனால் விவசாய பகுதிக்குள் காட்டெருமைகள் வருவதை தடுக்க வனப் பகுதியை சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊர்ப்பொது காளையின் இறுதிச்சடங்கு - இணைந்து செய்த 7 கிராம மக்கள்