திருச்சி மரக்கடை பகுதியில் இன்று, திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், மேற்கு தொகுதி வேட்பாளர் பத்மநாபன், ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி, முசிறி வேட்பாளர் செல்வராஜ், துறையூர் வேட்பாளர் இந்திராகாந்தி, மணப்பாறை வேட்பாளர் சந்திரசேகர், லால்குடி வேட்பாளர் தர்மராஜ், திருவெறும்பூர் வேட்பாளர் குமார் ஆகியோருக்கு ஆதரவாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவரும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆந்திரா, தெலங்கானா மாநில முதலமைச்சர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கு நிதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். அதற்காக தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். திமுக போல் பதவிக்காக அல்ல.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு ஸ்டாலின் தான் அனுமதி வழங்கினார். தற்போது அதை எதிர்த்து போராட்டமும் நடத்துகிறார். பொய் பேசியும், தில்லு முல்லு செய்தும் ஸ்டாலின் வெற்றி பெற முயற்சிக்கக் கூடாது. திமுக ஆட்சியில் இருந்திருந்தால் டெல்டா மாவட்ட விவசாய நிலங்களை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் நாங்கள் விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: ’எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி' - உதயநிதி