திருச்சி: இன்று இரவு 7 மணியுடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை முடிவடைய உள்ள நிலையில், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பணப்பட்டுவாடா குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு பணப்பட்டுவாடா குறித்து பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. கே.என். நேருவின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட காணொலிதான் அது.
காணொலியில், முசிறி தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக திமுக பிரமுகர் ஒருவர் கூறுகிறார். அப்போது பேசிய நேரு, அவர்கள் கொடுத்தால் கொடுத்துவிட்டு போகட்டும். 500 ரூபாய் முழுமையாகச் சென்று வாக்காளர்களைச் சேராது.
அதனால் 200 கொடு போதும் என்கிறார். மேலும் சில ஆபாச வார்த்தைகளைப் பேசி திமுகவினரைக் கண்டிக்கிறார். இந்தக் கூட்டத்தில் முசிறி தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே இவர் திருச்சி மேற்குத் தொகுதிக்குள்பட்ட தில்லை நகர், அரசு மருத்துவமனை காவல் நிலைய காவலர்கள் அஞ்சல் வாக்களிப்பதற்கு தலா 2,000 ரூபாய் கொடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.
இந்நிலையில் முசிறி தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து அவர் பேசிய காணொலி வைரல் ஆகியிருப்பது திமுகவிற்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொலியைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் அதிமுகவினர் கொண்டுசென்றுள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.