திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசுகையில், ”திருச்சியில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. நதிகளை நாம் புறக்கணிக்கக் கூடாது. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்த பிறகு நீர் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும். எதிர்காலத்தில் உலகளாவிய பிரச்னையாக தண்ணீர் பிரச்னை விளங்க உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கிராமங்களை இலக்காகக் கொண்டு செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கலால் போட்டிகள் அதிகரித்துள்ளன. அதனால் நமது திறமை மற்றும் அறிவுசார் அறிவை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. நம் நாட்டில் தற்போது வாய்ப்புகளும், திட்டங்களும் அதிகளவில் உள்ளன. எனினும் இதை அரசு மட்டும் செய்ய இயலாது. தனியார் பங்களிப்புடன் இதை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
என்சிசி, என்எஸ்எஸ் போன்றவற்றில் மாணவர்கள் இணைந்து குழு சக்தியை உருவாக்க வேண்டும். நமது நாட்டின் பண்பாடு, கலாசாரம் மதிப்புமிக்கதாகும். அதை நமது அன்றாட வாழ்வில் செயல்படுத்த வேண்டும். ஆடை, கலாசாரம், மொழி என எதுவாக நாம் பிரிந்து இருந்தாலும், இந்தியராக இருக்க வேண்டும்.
நான் குடியரசு துணைத் தலைவரான பிறகு ஆடையை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நான் ஆடையை மாற்ற மறுத்து விட்டேன். நான் முகவரி மட்டுமே மாறியுள்ளேன். ஆடையை மாற்ற மாட்டேன் என்று கூறிவிட்டேன். நான் வெளிநாடுகளுக்கு சென்றாலும் எனது ஆடை பலரது கவனத்தையும் ஈர்க்கிறது. ஒரு மனிதனின் தன்மையை ஆடை நிர்ணயம் செய்யாது. அவனது குணாதிசயமும், ஒழுக்கம், செயல்பாடும்தான் நிர்ணயம் செய்யும்.
நம் நாட்டில் 35 வயது உடையோர் 65 விழுக்காடும், 25 வயதுடைய 50 விழுக்காடும் உள்ளனர். இது நமக்குக் கிடைத்த அரிய பெரிய பொக்கிஷம் ஆகும். அதனால் நாம் உடல் ரீதியாக திறன் உடையவராகவும், மனதளவில் எச்சரிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும். நம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான உணவு வகைகள் உள்ளன. அவற்றை பின்பற்றி உண்ண வேண்டும். நமது நாட்டின் கலாசாரம் என்பது நமது வாழ்க்கை முறையாகும். மதம் என்பது வழிபாடு மட்டுமே. நமது கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். இதுதான் நமது சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.
மதம், சாதி, பாலின வேறுபாடு பார்க்கக்கூடாது. மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம் போன்றவை கல்வியின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சூரியன், தண்ணீர், பசுமை, இயற்கை ஆகியவற்றுடன் நாம் சில மணி நேரங்களை தினமும் செலவு செய்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். இயற்கையுடன் இணைந்து வாழ குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தர வேண்டும். அதேபோல் நமது நாட்டின் குடும்ப பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும். ஒரே குடும்பமாக வாழும் கலாசாரம் குறைந்து வருவது நல்லதல்ல.
ஆரம்ப கல்வியை தாய்மொழியில் கற்றுத்தர அனைத்து கல்வியாளர்களும் முன்வர வேண்டும். எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. வீடுகளில் தாய் மொழியில் மட்டுமே உரையாட வேண்டும். இதைத்தான் யுனெஸ்கோ, நமது அரசியலமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. நம் நாட்டின் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கான்வென்டில் படித்தவர்கள் கிடையாது. கல்வி என்பது நம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய ஒன்றாகும். இதற்கு முற்றுப்புள்ளி கிடையாது.
நம் நாட்டில் பயின்று வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதித்து மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரிசையில் நின்று எதையும் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அனைத்தும் ஆன்லைன் ஆகிவிட்டது. இதுதான் தற்போது மெயின் லைனாக உள்ளது. அதனால் யாரும் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவாகிவிட்டது. அனைத்து உதவித் தொகைகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் மூலம் பெறப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: நாராயணசாமி மீண்டும் முதலமைச்சரானால் காங்கிரஸூக்குதான் வீழ்ச்சி