மணப்பாறையை அடுத்த முத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர்கள், பாலுச்சாமி(52), பழனிச்சாமி (45). இருவரும் நேற்று மாலை கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த நாகன் மகன் சண்முகம்(39) என்பவரும் இவர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனம் கல்லாமேடு பிரிவில் சாலையைக் கடக்க முயன்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பாலுச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் விபத்தில் படுகாயமடைந்த மற்ற இருவரையும் அவசர ஊர்தி மூலம் மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பழனிச்சாமியும் பாதி வழியிலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் உடல் உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சண்முகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வளநாடு காவல் துறையினர், கன்னியாகுமரி மாவட்டைச் சேர்ந்த மாணிக்கம் ராஜுவை(33) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.