திருச்சி: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம், லால்குடியில் உள்ள அன்பு திரையரங்கில் நேற்று (பிப்ரவரி 24) ஒளிபரப்பானது. இந்தப் படத்தினைக் காண அஜித் ரசிகர்கள், இனிப்பில் மொய்க்கும் எறும்பைப் போல் திரையரங்கை மொய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிலர் திரையரங்கு வாயிலில், வெடி வெடித்துக் கொண்டாடினர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் வெடி வெடித்த இளைஞர்களை எச்சரித்தனர். ஆனால் அதனைச் சிரிதும் பொருட்படுத்தாமல், மீண்டும் வெடி வெடித்து ஆரவாரம் செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளனர்.
இதனைக் கண்டித்தபோது, இரு இளைஞர்கள், காவலர் சுரேஷ் என்பவரின் வலது கையினைக் கடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த சுரேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
இதையடுத்து சுரேஷை கடித்த அஜித் ரசிகர்கள் அருண் குமார், கோபிநாத் ஆகிய இருவரையும் லால்குடி காவல் துறையினர் கைதுசெய்து லால்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் நிறுத்தி முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!