மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாயை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவுக்கு ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியிலிருந்து பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கும் இதய பரிசோதனை செய்யக்கூடிய எக்கோ கருவி வாங்கப்பட்டுள்ளது.
இந்த கருவியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் இன்று (ஜனவரி 9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, எக்கோ கருவியை குழந்தைகளின் பயன்பாட்டுக்கு வழங்கினார்.
அதன் பின்னர் பேசிய அவர், ஏழைகளின் ஆலயமாக அரசு மருத்துவமனைகள் விளங்குவதாகவும், இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் கடவுள்களாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார். நாள்தோறும் நோய்கள் வளர்ந்து கொண்டே இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க போதுமான கருவிகள் மருத்துவமனைகளில் இருந்தாலும், கோடிக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளையே நாடுவதாக குறிப்பிட்டார்.
பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய எக்கோ கருவி இல்லை என்ற தகவல் தனது கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தற்போது அந்த கருவி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிய திருச்சி சிவா, இந்த கருவியின் மூலம் பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கும் இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றார்.