திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியை திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் காலை 9 மணிக்கு தொடங்கிவைத்தார்.
பின்னர், ஜல்லிக்கட்டு வீரர்களை உறுதிமொழி எடுக்க செய்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் துளசி மகாநாட்டை சேர்ந்த பழங்கனாங்குடி மாரியம்மன் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன்பிறகு துவாக்குடி, நடராஜபுரம் கோயில் மாடும் அவிழ்த்து விடப்பட்ட பிறகு அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
தங்கக்காசு பரிசு: மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 ஜல்லிக்கட்டு காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு உள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், சேர், அண்டா உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.
திருச்சி கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர் ஜல்லிக்கட்டு மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதியுடன் இருப்பது குறித்து சோதனைசெய்தனர். திருவெறும்பூர் பொறுப்பு டிஎஸ்பி ஜெயசீலன் தலைமையிலான 137 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜூன் 09இல் விக்னேஷ்சிவன் - நயன்தாரா திருமணம்?