மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக முருகானந்தம். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுக்கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் முருகானந்தம் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்தநிலையில், இன்று(மே.19) திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் முருகானந்தம். அப்போது அவர், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலில் கமல்ஹாசன் தன்னிச்சையாகப் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது, யாரையும் கேட்காமல் 100 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்தது போன்ற காரணங்களால் கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முன்பு 3.4 சதவீத வாக்கு வங்கி கட்சிக்கு இருந்தது.
தேர்தலுக்குப் பிறகு இது 6.8 சதவீதமாக உயரும் என்று பலராலும் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் 2.4 சதவீதமாக குறைந்து விட்டது. இதற்கு கட்சியின் தலைமை தான் காரணம். எங்களது கட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து எனது கட்சி என்ற நிலைப்பாட்டை கமல்ஹாசன் எடுத்தது தான் காரணம்.
இந்தத் தோல்விக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த தனியார் நிறுவனத்தை குறைக்கூற விரும்பவில்லை. இதற்கு முழுக்க கமல்ஹாசன் தான் காரணம். கூட்டணி கட்சிகளுக்கு 100 தொகுதிகளை ஏன் அவர் கொடுத்தார்? என்பது தற்போது வரை தெரியவில்லை.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் பலமான கூட்டணி அமைத்து இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல் கமல்ஹாசன் தேர்தலை சந்தித்தது மிகப் பெரிய தவறு.
பணம் அல்லது தொலைநோக்கு கொள்கை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று கமல்ஹாசனிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. இந்தத் தேர்தலில் கட்சியை வளர்ப்பதற்கு வாய்ப்பு இருந்தது.
ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் செய்து விட்டார். ஆகையால் என்னுடன் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வீரசக்தி மற்றும் 2,000 கிளை செயற்குழு உறுப்பினர்கள், 200 கிளைச் செயலாளர்கள் என, ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலகுகிறோம்.
தொடர்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு அரசியலில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். அது எப்படி? எவ்வாறு? என்பதை பின்னர் தெரிவிக்கப்படும். அடுத்த கட்டமாக திருவெறும்பூர் அல்லது சென்னை ஆலந்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது" என்றார்.