- மருத்துவ பட்டப் படிப்புக்கு தேசிய நிறைநிலைத் தேர்வு கொண்டு வருவதை நிறுத்த வேண்டும்,
- பிரிட்ஜ் கோர்ஸ் நடத்துவதை நிறுத்த வேண்டும்,
- தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரக்கூடாது,
- மருத்துவத் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் வகையிலான தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் கடந்த மூன்று நாட்களாக போராடி வருகின்றனர். மூன்றாவது நாளான நேற்று கண்களில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு கல்லூரி வளாகத்தில் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவி யோக பிரியா கூறுகையில், "மருத்துவ படிப்பு முடித்த பின்னர் தேசிய நிறைநிலைத் தேர்வு தேர்ச்சி பெற்றால்தான் தகுதி பெற்றவராக கருத முடியும் என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கண்டிப்பாக இந்தத் தேர்வுகளை எழுத பிரிட்ஜ் கோர்ஸ் சேர்ந்து படிக்க வேண்டும்.
ஏழை எளிய குடும்பத்திலிருந்து மருத்துவக் கல்விக்கு வந்துள்ள மாணவ மாணவியர் அதிக பணம் செலவழித்து பிரிட்ஜ் கோர்ஸ் படிக்க இயலாது. அதனால் தேசிய நிறைநிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்" என தெரிவித்தார்.